Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 5

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 5


அதற்கேற்ப ருதுத்வஜனை அவன் நாகலோக நண்பர்கள் பல பொய்யான கதைகளையும் கூறி   தம் வீட்டிற்கு ஒரு முறையேனும் வருமாறு அழைத்தார்கள். தமது தந்தை அவனைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அவனும் தனது நண்பர்களின் தந்தை தனக்கும் தந்தைக்கு சமமானவரே என்பதினால் அவர்களுடன் செல்ல சம்மதித்தான். ஆனால் அவர்கள் அவனிடம் தாம் போக உள்ளது நாக லோகம் என்று கூறவில்லை. அதை அவனிடம் ரகசியமாகவே வைத்து இருந்தார்கள். ஒரு படகில் ஏறி  அந்தக் கரைக்கு செல்வதாக கூறி அழைத்துச் சென்றவர்கள் நடுக் கடலில் தந்திரமாக அவன் மனதையும் கண்ணையும் கட்டிவிட்டு தமது ராஜ்யத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.  பலமணி நேரமாக படகில் பயணம் செய்து கொண்டு இருந்த களைப்பில் தூங்கி விட்டோமோ என எண்ணியபடி கண்களை திறந்த ருதுத்வாஜன் தான் ஒரு விசித்திர உலகில் இருப்பதைக் கண்டான். அவனுக்கு இருபுறமும் நாக முகங்களைக் கொண்ட இருவர் நின்று கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் அவனிடம் ' நண்பா, எங்களை மன்னித்து விடு. உன் அன்பையும் நல்ல பண்புகளையும் கண்ட நாங்கள் உன்னுடன் நட்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் பூஉலகில் மாறு ரூபத்தில் வந்து உன்னுடன் இருந்தோம். எங்களுடைய தந்தை உன்னைப் பார்க்க விரும்பியதினால்தான் உன்னை இங்கு தந்திரமாக அழைத்து வந்தோம். எங்களை தவறாக நினைக்காதே' எனக் கூற அவர்களின் குரலில்  இருந்தே அவர்கள் தன்னுடைய நண்பர்களே என்பதை புரிந்து கொண்டவன் அவர்களை தான் மன்னிக்கும் அளவுக்கு உயர்ந்தவன் அல்ல என்றும், யாராக இருந்தாலும் நண்பர்களாகிவிட்ட  பின் நண்பர்களின் தந்தையும் தன்னுடைய தந்தை போன்றவரே என்பதினால் அவர்கள் மனிப்புக் கேட்கக் கூடாது என அவர்களை தடுக்க அவனுடைய உயர்ந்த பண்பைக் கண்டவர்கள் அவன் மீது மேலும் மதிப்பு கொண்டார்கள்.

அவனை தம்முடைய தந்தையிடம் அழைத்துச் சென்றார்கள். நல்ல வயதானவர் அந்த நாக மன்னன். அவரைக் கண்ட உடனேயே ருதுத்வாஜன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். அவனை தூக்கி நிறுத்தி மார்போடு கட்டி அணைத்துக் கொண்டார் நாக மன்னன். அவனிடம் அவனது உயர்ந்த பண்புகளை தனது மகன்கள் ஏற்கனவே தம்மிடம் கூறி உள்ளார்கள் எனவும் அதனால்தான் அத்தனை சிறப்பான குணங்களைக் கொண்ட அவனை தான் காண விரும்பியதாகவும் கூறினார்.  அதன்பின் வேண்டும் என்றே இத்தனை நல்ல பண்பு மிக்கவன் விரைவிலேயே நல்ல புத்திர பாக்கியம் அடைவான் எனக் கூறினார். அது மட்டும் அல்லாமல் அவனுக்கு வேறு என்ன உதவி வேண்டும் எனவும்  கேட்டார். அதைக் கேட்ட ருதுத்வாஜன் 'எனக்கு வாழ்க்கையில் ஒன்றுமே தேவை இல்லை, அனைத்துமே உள்ளது ஐயா ...உங்களுக்கு நன்றி' என பவ்வியமாகக் கூறினான். ஆனால் அவன் மனதில் மதாலசையின் நினைவே ஓடியது. அதை நாக மன்னனான் கவனித்தார். மீண்டும் அடுத்த சில நாட்களில் அவர் அதையே மீண்டும் கூறிவிட்டு 'உனக்கு என்ன வேண்டும் என்று கூறு மகனே, அதை என் தவ வலிமையால் உனக்கு பெற்றுத் தருகிறேன்' என்றார். அப்போதும் சற்றே முகம் வாடிய ருதுத்வாஜன் மதாலசயையே நினைத்தான். இதுவே தக்க தருணம் என நினைத்த அவனது நண்பர்கள் இருவரும் நாடகம் ஆடினார்கள் 'தந்தையே எங்களுடைய நண்பனுக்கு இல்லாதது எதுவும் இல்லை. ஆனால் அவன் மிகவும் நேசித்து வந்த அவனது ஆசை மனைவியை ஒரு வஞ்சகன் நயவஞ்சகமாக அழித்து விட்டான். அவளைக் காண முடியாமல் தவிக்கும் எங்கள் நண்பனுக்கு அவள் உயிரை மீட்டுத் தந்தால் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்' என்றார்கள்.

அதைக் கேட்டு சிரித்த நாக மன்னன் ' குழந்தாய் , உன் மனதில் ஓடும் எண்ண அலைகளை நான் நன்கே அறிவேன். இறந்தவளை திரும்ப அழைத்து வர முடியாது. ஆனால் அவளை என் தவ வலிமையினால் ஒரு முறை உனக்குக் காட்டுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ அவளை தொடக்கூடாது. சம்மதமா' என்று கேட்டார். ருதுத்வாஜன் உடனேயே அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மதாலசையை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட மதாலசையும் ருதுத்வஜனும் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனால் அவள்கள் தள்ளித் தள்ளி நின்று கொண்டு இருந்ததினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின்படி ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளவில்லை.  அப்போது தன்னுடைய தோளை  யாரோ தொடுவதைக் கண்ட ருதுத்வாஜன் திரும்பிப் பார்த்தான். அந்த நாக மன்னரே அங்கு அவன் தோளை  பற்றிக் கொண்டு இருந்தார். அவனிடம் கூறினார்'கவலைப் படாதே என் மகனே, உனக்கு மதாலசையை கொண்டு வந்து தருகிறேன். அதற்கு முன் இந்தக் கதையைக் கேள்' எனக் கூறி விட்டு ஆரம்பம் முதல் அன்றுவரை நடந்த அனைத்தையும் கூறி விட்டு தானும் தன்னுடைய சகோதரரும் எப்படி சிவபெருமானின் அருளினால் மதாலசையை உயிர் பிழைக்க வைத்து வந்தோம் என்றக் கதையையும் விவரமாகக் கூறினார். ஆனால் சில சாபம் காரணமாகவே அவர்கள் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறி அவர்கள் இருவரையும் மீண்டும் நேருக்கு நேர் ஒன்று சேர்த்து மகிழ்ச்சியோடு பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார்.

மடிந்து போன மனைவி உயிரை திரும்பப் பெற்று பிழைத்து வந்தக் கதையைக் கேட்ட மன்னன்  குடும்பத்தினர் அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள். ருதுத்வாஜன் ராஜ்ய பரிபாலனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டான். மனைவியுடன் மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தவன் தனது தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தான்.

காலம் உருண்டது. மதாலசை கர்பமுற்று ஒரு அழகிய ஆண் குழந்தைப் பெற்று எடுத்தாள் . குழந்தைப் பிறந்து பெயர் வைக்கும் வைபவம் நடந்தபோது குழந்தைக்கு நல்ல பெயரை ருதுத்வாஜன் சூடினான். அவன் பெயர் வைத்ததும் அதைக் கேட்டு அனைவரும் கை தட்ட மதாலசை மட்டும் கேலியாக சிரித்தாள். அதக் கண்டு அனைவரும் துணுக்குற்றார்கள், ஆனால் ராணி என்பதினால் எதுவும் கூற முடியவில்லை. வேறு யாராவது அதை செய்து இருந்தால் அதை ஒரு அவமானமாக கருதி இருப்பார்கள். அதை கவனித்த ருதுத்வஜனும் அதை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான். மதாலசையோ அது சிறு குழந்தையாக இருந்தபோது அதை தூங்க வைத்த நேரங்களில் தத்துவப் பாடல்களையே பாடி தூங்க வைத்தாள். இந்த பாழாய் போன பூமியில் வந்து ஏன் பிறந்தாய், இந்த உலகமே ஒரு மாயை அல்லவா, இதில் நீ பற்றற்று இருக்க வேண்டும் என்றே பாடி வளர்த்தாள். அதற்கு அந்த வயதில் அந்த பாடல்கள் என்ன புரியும் என அனைவரும் வியந்தார்கள். அதையும் கவனித்த மன்னன் அவள் ஏன் இப்படிப்பட்ட பாடல்களை குழந்தைக்கு பாடி தாலாட்டுகிறாள் என எண்ணி வியந்தது உண்டு. ஆனாலும் அதையும் அவன் பொருட்படுத்தவில்லை. அந்தக் குழந்தை நல்ல பண்புகளோடு பெரியவனாகி வளர்ந்து வந்தது. குழந்தை பன்னிரண்டு வயதானபோது திடீரென ஒரு நாள் நாட்டை விட்டு வெளியேறி காட்டிற்குள் சென்று சன்யாசத்தை மேற்கொண்டு விட்டது. மன்னன் அதிர்ந்து போனான்.

இன்னும் காலம் ஓடியது. அடுத்து பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும்போதும் மதாலசை கேலியாக  சிரித்தாள். அந்தக் குழந்தையையும்  மதாலசை  தத்துவப் பாடல்களைப் பாடியே வளர்த்தாள். அதையும் கவனித்த மன்னன் அவள் ஏன் இப்படிப்பட்ட பாடல்களை இந்தக் குழந்தைக்கும் பாடி தாலாட்டுகிறாள் என எண்ணி வியந்தது உண்டு. ஆனாலும் அதையும் அவன் பொருட்படுத்தவில்லை. இன்னும் சில காலம் பார்க்கலாம் எனப் பொறுத்து இருந்தான். அந்தோ பரிதாபம், அந்தக் குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆகியதும் காட்டிற்குள் சென்று சன்யாசி ஆகிவிட்டது. மன்னன் மனம் உடைந்தான். ஆனால் மதாலசை சற்றும் அதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அதே சமயத்தில் கணவனின் பணிவிடைகளுக்கும் பிற காரியங்களிலும் எந்த குறையும் வைக்கவில்லை. அரசனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்களும் அவள் நடத்தையைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள். மூன்றாம் முறை அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் கதியும்- பெயர் சூட்டும் வைபவம் முதல் சன்யாசத்தை ஏற்று காடு செல்லும்வரை- அனைத்து விதங்களிலும் அதே போலவே இருந்தது.

Our Sincere Thanks to 
Santhipriya

https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.