ஸ்ரீ இராமானுஜர் - 20 பகுதி-6-A
ஸ்ரீ இராமானுஜர் பகுதி -6
சைவ மன்னனது சூழ்ச்சி
சைவ மன்னனின் ஆட்சி அப்பொழுது சோழ நாட்டில் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. இராமானுஜர் இருக்கும் வரை சைவ சமயம் ஏற்றம் பெறாது என்பதை மன்னன்
உணர்ந்தான். எனவே வஞ்சகமாக அவரை வரவழைத்துக் கொன்றுவிட திட்டமிட்டான். அதன்படி
இராமானுஜரை அழைத்துவர ஏவலாட்களை அனுப்பி வைத்தான். நுண்ணிய அறிவுடை கூரேசனுக்கு
மன்னன் எதற்காக ஆள் அனுப்பியிருக்கிறான் என்று புரிந்து விட்டது. அவர்
இராமானுஜரிடத்துப் போய் ”உடனே
இங்கிருந்துத் தப்பி சென்று விடுங்கள்” என்று கூறினார். “வைணவம் தழைக்கவும், அடியவர்களைக் காக்கவும் தேவரீர் உயிருடன் இருக்க வேண்டும்” என்று யாசித்தார். அதனால் அவரே உடையவரின் காவியுடையை
அணிந்து கொண்டு திரி தண்டத்தையும் எடுத்துக் கொண்டு பெரிய நம்பியுடன் அரசனைக்
காணக் கிளம்பினார். இந்த உக்தியை கூரேசர் சொன்னதும், மனம் பதைபதைத்து இராமானுஜர் முதலில் உடன்படவில்லை. ஆனால்
வேறு வழியின்றி அவர் கூரத்தாழ்வாரின் வெள்ளை வேட்டியை அணிந்து கோவிந்தன் முதலான
சில சீடர்களுடன் திருவரங்கத்தை விட்டுப் புறப்பட்டார்.
தன் முன் நின்ற கூரத்தாழ்வாரை இராமானுஜர் என்று எண்ணி
அவரருக்கும் அவர் உடன் வந்திருந்த பெரிய நம்பிகளுக்கும் முதலில் தக்க ஆசனம்
கொடுத்து அமர வைத்தான் சோழ அரசன். பின் சபையோருடன் விவாதம் செய்ய வைத்தான்.
கூரேசரும் நிறைய மேற்கோள்கள் காட்டி எப்படி நாராயணனே அனைத்து உயிர்களுக்கும்
தெய்வம் என்று சொன்னார். ஆனால் நாலூரான் என்கிற அவனின் மந்திரி வந்திருப்பது
இராமானுஜர் அல்ல கூரத்தாழ்வான் என்று அரசனிடம் கூறிவிட்டான். ஏனென்றால் அவன்
கூரத்தாழ்வாரின் சீடர். அதனால் அவரை நன்கு தெரியும். இதனால் கோபம் அடைந்த அரசன்
கூரத்தாழ்வார்,
பெரிய நம்பிகள் இருவரின்
கண்களையும் பிடுங்கி விடுமாறு ஆணையிட்டான். இதைக் கேட்டவுடன் கூரத்தாழ்வார்
அவர்களுக்கு அந்த வேலையை வைக்காமல் தானே தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டார்.
அவர்கள் இருவரையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காவலர்கள் பெரிய நம்பி கண்களை
பிடுங்கி எறிந்தனர். அப்போதும் கூரேசர் மனத்திலும் பெரிய நம்பி மனத்திலும்
இராமானுஜரை காப்பாற்றிய மகிழ்ச்சி தான் இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு
பிச்சைக்காரன் உதவியுடன் திருவரங்கம் திரும்பும் வழியிலேயே பெரிய நம்பி பரமபதம்
அடைந்து விட்டார். கொடுமைகள் பல செய்த சோழ மன்னனுக்குக் கண்ட மாலைத் தோன்றி கிருமிகள்
அவன் கழுத்தை அழித்துக் கொல்ல, பெரும்
துன்பத்துக்கு ஆளானான். அவனுக்குக் கிருமி கண்டன் என்ற பெயரும் நிலைத்து விட்டது.
No comments