ஸ்ரீ இராமானுஜர் - 21 பகுதி-6-B
பௌத்தர் வைணவராதல்
திருவரங்கத்தை விட்டுக் கிளம்பிய இராமானுஜர் இரண்டு நாட்கள்
தொடர்ந்து இரவும் பகலும் நடந்து, சோழ நாட்டு
எல்லையை அவரும் அவருடன் வந்த சீடர்களும் தாண்டினர். களைத்துப் போய் பசி, தாகம், குளிரும்
வாட்ட சில பாறைகளின் மேல் படுத்து உறங்கினர். அவ்விடம் வேடுவர்களின் இருப்பிடம்.
அவர்கள் இவர்களுக்காகத் தீமூட்டி, தின்னக்
கனிகளும் எடுத்து வைத்திருந்தனர். எழுந்தவுடன் இவர்களின் உதவியைக் கண்டு
இராமானுஜர் நெகிழ்ந்து போனார். பின்னர் அங்கிருந்த ஒரு பிராமணர்கள்
குடியிருப்புக்குச் சென்று அங்கு ஒருவர் வீட்டில் வயிறார உண்டு அனைவரும்
களைப்பாறினர். அவர்கள் வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்து பின் அங்கிருந்து
வடமேற்கு திசை நோக்கிக் கிளம்பினர். அதற்கு முன்பு தங்களுக்கு உதவிய
அவ்வீட்டுக்குரிய ரங்கதாசருக்கு மந்திர தீக்ஷையும் அளித்துத் தன் சீடராக்கிக்
கொண்டார். பின்னர் சாலக்கிராமம் என்னும் ஊரில் சில நாட்கள் தங்கி அடுத்து ஒரு
நரசிம்ம ஷேத்திரத்துக்குப் புறப்பட்டார். அவ்வூர் அரசர் பெயர் விட்டலதேவர். பௌத்த
மதத்தைச் சார்ந்தவர். ஆயிரக் கணக்கான பௌத்தர்களுக்கு அன்னதானம் செய்வதை தினப்படி
வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அவளுக்குப்
பிடித்திருந்த பேயை பலர் முயன்றும் ஓட்டமுடியவில்லை. அரசர் இராமானுஜரை தன்
அரண்மனைக்கு அழைத்தார். இவர் உள்ளே வந்ததுமே அந்தப் பேய் அடுத்தக் கணம்
ஓடிவிட்டது. இதனால் பெரிதும் மகிழ்ந்தார் அரசர்.

No comments