Header Ads

ஸ்ரீ இராமானுஜர் - 23 பகுதி-6-D

பீ பீ நாச்சியார் (அல்லது) துலுக்க நாச்சியார்

ஒரு நாள் இரவு அவர் கனவில் யாதவாத்ரிபதி தோன்றி எனக்குக் கோவில் எழுப்பி, குளம் அமைத்து, வைணவர்கள் இட்டுக் கொள்ளத் திருமண் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து சேவை செய்துள்ளாய். இன்னுமொரு வேலை உள்ளது. உத்சவ மூர்த்தி இல்லாததால் கோவிலுக்கு வர முடியாதவர்களுக்காக நான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் இருக்கிறேன். தில்லி அரசனின் பாதுகாப்பில் இருக்கும் இராமப்ரியரைஇங்கே கொண்டு வந்து சேர்த்துவிடுஎன்று ஆணையிட்டார்.

தில்லி சென்று அரசனை சந்தித்தார் இராமானுஜர். இஸ்லாமிய மன்னன் ஆயினும் அவரை நல்ல முறையில் வரவேற்று தன் கஜானாவைத் திறந்து காட்டினான் பாதுஷா. அங்கு விக்கிரகம் எதுவும் இல்லை. மனமொடிந்த இராமானுஜருக்கு அன்று இரவு பெருமாள் கனவில் தோன்றி தான் அரசன் மகளிடம் இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் அரசனிடம் இவ்விஷயத்தைச் சொல்ல அவன் அதை நம்பவில்லை. இருந்தால் எடுத்துச் செல் என்று அந்தப்புரத்துக்கு எதிராஜரை அழைத்துப் போனான். போனதும் இராமப்ரியர் ஜல் ஜல் என்று நடந்து வந்து உடையவர் மடியில் அமர்ந்தார். வாராய் என் செல்லப் பிள்ளாய்என்று கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தார் உடையவர். அரசகுமாரி அங்கு இல்லாததால் நல்லதாகிப் போக உடனே உடையவரும் பெருமாளுடன் திருநாராயணபுரம் கிளம்பினார்.

ஆனால் அரசகுமாரிக்கு இராமப்ரியரைப் பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. பாதுஷாவின் புத்திரி பித்தம் பிடித்தவள் போல் ஆனாள். இராமானுஜரை பின் தொடர்ந்து ஓடி வந்தாள். இராமானுஜரும் இராமபிரியரும் இருந்த பல்லக்கை நெருங்கி தடுத்து நிறுத்தினாள். அவளின் கள்ளம் கபடமற்றக் காதலைக் கண்டு உருகினார் உடையவர். நந்தகுமாரனை நேசித்த நப்பின்னையின் சாயலை அவளிடம் கண்டார். அவளை இராமப்ரியருடன் பல்லக்கில் அமர வைத்துவிட்டு அவர் இறங்கிக் கொண்டார். கொஞ்ச தூரம் சென்றதும் பல்லக்குத் தூக்கிச் செல்பவர்கள் எடை குறைகிறது என்று கூற, பட்டுச்சீலையை விலக்கி இராமானுஜர் பல்லக்கின் உள்ளே பார்க்க அங்கே இராமப்ரியர் மட்டுமே இருந்தார், அரசகுமாரியைக் காணவில்லை. இராமப்ரியருடன் ஒன்றிவிட்டாள் என்பதை உணர்ந்த உடையவர் தேவி, உன் திருவுருவத்தை விக்கிரகமாக வடித்து பெருமாள் திருவடி நிழலிலேயே பீ பீ நாச்சியாராகப் பிரதிஷ்டை செய்வேன்என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரக்கக் கூறினார் எதிராஜர். அவ்வாறே பின்பு செய்தும் முடித்தார்.


அவர் திருநாராயணபுரம் நெருங்கும் போது திருடர் கூட்டம் ஒன்று அவர்களைத் தாக்க, உடனே அந்தப் பகுதி சேரியில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை விரட்டி இராமப்ரியரைக் காப்பாற்றிக் கொடுத்தனர். அதற்குப் பிரதிபலனாக எதிராஜர் அவர்களுக்குத் திருக்குலத்தார்என்று திருநாமம் சூட்டி வருடந்தோறும் நடக்கும் பிரம்மோத்சவத்தில் மூன்று நாட்கள் அவர்களின் திருவிழாவாக இருக்கும் என்றும் அருளினார். அது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.