Header Ads

ஸ்ரீ இராமானுஜர் - 25 பகுதி-6-F

திருவரங்கம் திரும்பினார்


திருவரங்கம் திரும்பிய போது அவருக்கு வயது நூறு இருக்கும். உடலும் தளர்ந்து விட்டது. அங்கு வந்து சேர்ந்த சில நாட்களில் பெரிய நம்பியின் இல்லத்துக்குச் சென்று அவரின் மகள் அத்துழாய்க்கும், அவரின் மகனும் இராமானுஜரின் சீடருமான புண்டரீகருக்கும் ஆறுதல் கூறினார். பின் கூரேசரைக் கூட்டிவர திருமாலிருஞ்சோலைக்கு ஒரு திருத் தொண்டரை அவசர அவசரமாக அனுப்பி வைத்தார்.

தன்னை வந்து தொழுது எழுந்த கூரேசரின் நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கலங்கினார். ஆழ்வாரை அள்ளி எடுத்து ஆணைத்துக் கொண்டார் எதிராஜர். தன் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். அவரை விட பெரிய அடியவர் எவரும் உண்டோ என்று சொல்லி கூரேசர் வைணவத்துக்காகவும் தனக்காகவும் செய்தத் தியாகங்களை நினைத்து உருகி அவர் திரும்பப் பார்வை பெற இறைவன் அருள வேண்டும் என்று விரும்பினார்.

காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் வேண்டி மீண்டும் கூரேசர் கண் பார்வை பெற வேண்டும் என்று அவரிடம் அறிவுருத்தினார். அனால் கூரத்தாழ்வார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அகக் கண்கள் இனி தனக்குத் தேவை இல்லை என்று கூறினார். வைகுந்தனைக் காண ஞானக் கண்களே போதும் என்றார்.

ஆனாலும் இரண்டு நாட்களில் திரும்ப எதிராஜர் கூரத்தாழ்வாரை வரதராஜன் மேல் வாழ்த்துக் கவி பாட நிர்பந்தித்தார். குருவின் பேச்சை மீற முடியாமல் கூரத்தாழ்வார் வரதராஜஸ்த்வம்இயற்றி அதை அவர் சன்னதியில் பாடி முடித்தார். அத்திகிரியார் மனமகிழ்ந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க கூரேசரோ தனக்குப் பார்வை வேண்டும் என்று கேட்காமல் தன் பார்வைப் போவதற்குக் காரணமாக இருந்த தன் சீடன் நாலூரானும் நற்கதி அடைய வேண்டும் என்று வரம் வாங்கினார். கெட்டவரோ நல்லவரோ குருவைச் சார்ந்த சீடன் நற்கதி அடைகிறான் என்னும் உயரிய வைணவ சித்தாந்தத்தை நடைமுறையில் செய்து காட்டினார் கூரேசர். விரைவில் அரங்கனின் அடி மலர்களில் யாசித்து பரமபதத்தைப் பெற்றார். அவருக்குப் பின் அவர் மகன் பராசரரை ஆச்சாரியன் ஆக்கினார் உடையவர்.

இவருக்குப் பின் உறங்காவில்லியும் எம்பெருமானார் எதிராஜர் திருவடியில் தலை வைத்து பரமபதம் போனார். அப்பொழுது இராமானுஜருக்கு ஏறத்தாழ நூற்றி இருபது வயது ஆகிவிட்டது.

அவரும் பரமபதம் புகும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்தார். தம் பிரிவைத் தாளாது தொண்டர்கள் தவிப்பார்கள் என்று உணர்ந்து சில காரியங்களை உடனே செய்தார். தன்னைப் போலவே தத்ரூபமாக ஒரு விக்கிரகத்தை வடிக்கச் சொல்லி அதை ஆரத் தழுவி அதனுள் தன் அருட்சக்தியை வைத்தார். தான் உகந்த திருமேனிஎன ஏற்றம் பெற்ற அந்த விக்கிரகத்தை தன் அவதாரத் தலமான ஸ்ரீ பெரும்பூதூரில் பிரதிஷ்டை செய்யுமாறு முதலியாண்டான் மகன் கந்தாடையாண்டனிடம் கூறினார்.


அவர் நாட்பட நாட்படத் தளர்வுற்று ஒரு நாள் தன் திருமுடியை எம்பார் மடியிலும் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்து வைகுந்தம் ஏகினார். திருமாலின் படுக்கையாகத் திரும்ப ஆனார். அரங்கன் அவரைத் திருப்பள்ளிப் படுத்த தன் வசந்த மண்டபத்தையே கொடுத்தார். அந்த இடத்திலேயே அவருக்கு ஒரு சன்னதி எழுப்பினர் அவருடைய சீடர்கள். தானான திருமேனியாய்திகழ்கிறது இன்று வரை.

No comments

Powered by Blogger.