ஸ்ரீ இராமானுஜர் - 27 பகுதி-6-H
முக்கியக் குறிப்பு:
இராமானுஜர் வலியுறுத்துவது என்ன? பரமனின் 1000 நாமங்களையும் சொல்லக்கூடத் தேவையில்லை, “நாராயணா” என்ற ஒரு
திருநாமத்தையாவது (ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம் (அ) அட்சாட்சர மந்திரம், ரகசிய மந்திரங்கள் என்று சொல்லப்படும் மூன்றில்
முதன்மையானது,
மற்றவை துவய மந்திரம், சரம சுலோகம்) தினம் ஓதி உய்யும் (வீடு பேறு அடையும்) வழியை
உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று நமக்கு அருளியிருக்கிறார்.
திருமந்திரத்தை வதரியாசிரமத்தில் (பத்ரிநாத்) நாராயணன்
நரனுக்கு அருளினான். அவனே நரன் (சீடன்), அவனே நாராயணன் (ஆச்சார்யன்)!
மந்திர ரத்தினம் என்று போற்றப்படும் துவயத்தை வைகுந்தத்தில்
தான் மார்பில் தரித்த பிராட்டிக்கு (இலக்குமி தேவிக்கு) பரமன் உபதேசித்தார்.
ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!
சரம சுலோகத்தை பார்த்தசாரதியாக குருச்சேத்திரப்
போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்தார். பகவத் கீதையில் இது உள்ளது.
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
இந்த 3
மந்திரங்களையுமே நாராயணனே அருளியதால், அவன்
குரு பரம்பரையின் முதல் ஆச்சார்யன் ஆகிறான்! பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, முக்திக்கான வழிவகைகள், முக்தி என்ற இலக்கின் தன்மைகள், முக்திக்குத் தடையாக இருப்பவை ஆகிய 3 விஷயங்களை விளக்கும் சாரமாகவே இம்மூன்று ரகசிய
மந்திரங்களும் (ரகஸ்யத்ரயம்) விளங்குவதாக மணவாள மாமுனிகள் அருளியிருக்கிறார்
விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் தான் அருளிய
திருப்பல்லாண்டில்
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி
வந்தொல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோ
நாராயணாய வென்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர், வந்து
பல்லாண்டு கூறுமினே!
திருமந்திரத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.
இதனாலேயே, பன்னிரு
ஆழ்வார்களுக்கும்,
அவ்வாழ்வர்களை திருமாலுக்கும் மேலாகக் கொண்டாடிய, குருபரம்பரையின் நடு நாயகமாகத் திகழும், பகவத் ராமானுசருக்கும் வைணவத்தில் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது!
அவ்வகையில், திருமால்
மேல் பற்றும்,
பக்தியும் உள்ள எவரும் வைணவரே என்பதும் பல பிரபந்தப்
பாசுரங்களில் காணக்கிடைக்கும் செய்தியே. இத்தகைய வர்ண பேதத்திற்கு எதிரான
செய்தியையே எந்தை இராமனுச முனி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மேலேறி நின்று, தனது குருவின் ஆணைக்கும் எதிராக, உலகுக்கே உரக்க அறிவித்தார்!
ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம்!
No comments