குரு ஸ்ரீ ராகவேந்திர் - வித்யாப்யாஸம் & விவாகம்
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
வித்யாப்யாஸம் & விவாகம் : குருராஜரும் தமது தந்தையின் ஆணைக்கிணங்க, வேங்கடபட்டருக்கு கர்ப்பாஷ்டமத்தில் உபநயனம் செய்வித்து, முறைப்படி வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்பதற்காக, மதுரையில் வாழும் தமது தமக்கையின் பதியான " லஷ்மிநரசிம்மாச்சாரி
" அவர்களிடம் அனுப்பி வைத்தார். வேங்கடபட்டர் ஏகசந்தக்ராஹியாக இருப்பதால்
தமது குருவிடம் முறையே காவியங்கள், நாடகங்கள், அலங்கார சாஸ்திரங்கள், தர்க்கம், வியாகரணம் முதலான சாஸ்திரங்களை வெகு விரைவில் கற்றறிந்த
பின் மத்வஸிந்தாந்தரீதியாக வேதாந்த வித்தையும் கற்று மிக்க வேதாந்தியாகத்
திகழ்ந்தார்.
பிறகு தமையனான குருராஜர், யுக்த ( திருமண ) வயதை அடைந்த வேங்கடபட்டருக்கு
புவனகிரியில் வசித்த ஒரு அந்தணரின் மகளான " சரஸ்வதி பாய் " எனும்
கன்னிகையை விவாகம் முடித்து வைத்தார்.
பரிமளாச்சார்யார் : கிருஹஸ்த தர்மத்தை ஏற்ற பிறகும்
வேங்கடபட்டருக்கு ஞானத்தாகம் தீரவில்லை. எனவே புவனகிரியிலிருந்து கும்பகோணம்
சென்று,
அங்கு மகாஜ்ஞாதாவாய் (மேற்பட்டவராய் )விளங்கிய சுதீந்திர
சுவாமிகளிடம் " ஸ்ரீமத் ந்யாயஸுதா " எனும் சாஸ்திரப் பாடம் படித்து
வந்தார். இவருடன் பல சீடர்கள் படித்து வந்தாலும் இவரே அனைவரிலும் குருபக்தி
மிக்கவராகவும்,
குரு போதித்த பாடங்களை கவனத்துடன் கேட்டு மறுபடியும்
சிந்தனை செய்பவராகவும், ஆசார
அநுஷ்டானங்கள் தவறாதவராகவும் இருந்தார். இதுகண்டு சக மாணவர்கள் வேங்கடபட்டரிடம்
பொறாமை கொண்டு குருவிடம் சென்று, வேங்கடபட்டர்
படித்த பாடங்களை மீண்டும் சிந்தனை செய்வதே இல்லை, இரவில் நன்றாகத் தூங்குகிறார் போன்ற சில குற்றச்சாட்டுகளை
வைத்தனர். குருவும் விசாரிப்பதாகச் சொல்லி அனுப்பினார்.
ஒருநாள் நடு இரவில் எல்லோரும் நித்திரையில் இருக்கும் போது
சுவாமிகள் ஒருமுறை மெதுவாக மடத்தைச் சுற்றி வந்தார். மாணவர்களெல்லாம் தூங்கிக்
கொண்டிருந்தனர்,
ஒருபுறம் வேங்கடபட்டரும் நித்திரையாக இருந்தார், ஆனால் அவரருகில் சில ஓலைகளும் எழுத்தாணியும் இருந்தன.
ஓலையில் எழுதப்பட்டது என்னவென்று
சுவாமிகள் வெளிச்சத்தில் பார்த்தார், என்னே ஆச்சரியம் ! பகலில் அவர் போதித்தனவெல்லாம் அப்படியே
வியாக்யானமாக ( வரிவுரையாக )அமைத்திருக்கிறார் இந்த உத்தம சீலர். அது தவிர, ஓரிடத்தில் தாம் விளக்கமாகச் சொல்லமுடியாத விடயத்தையும்
வேங்கடபட்டர் எளிதில் விளங்கும் படி விளக்கியிருப்பதைக் கண்டு உள்ளம் பூரித்தார்.
காலையில் படிக்கும் நேரம் வந்தது. சீடர்கள்
குழுமியிருந்தனர். ஆசாரியர் வேங்கடபட்டரைப் பார்த்து " இதற்கு முன் எழுதிய
சுவடிகளையும் கொண்டு வா " என்று ஆணையிட்டார். அவர் கொண்டுவந்த சுவடிகள்
எல்லாவற்றையும் சீடர்களுக்குக் காட்டி, இவரல்லவோ உத்தமச் சீடர். ஸ்ரீமத் ந்யாயஸூதைக்கு இரவில்
நீங்களெல்லாம் தூங்கும்போது விழிந்திருந்து இந்தச் சிறந்த வியாக்யானத்தை இயற்றியிருக்கிறார் வேங்கடபட்டர், இது " ஸூத பரிமளம் " என்ற பெயருடன் ஸ்ரீமத்
ந்யாயஸூதையின் சிறந்த வியாக்யானமாகத் திகழும், இதை எழுதிய வேங்கடபட்டரும் இனிமேல் " பரிமளா சாரியார்
" என அழைக்கப்படுவார் என்று கூறி முடித்தார். மற்ற சீடர்கள் வெட்கமுற்று
வேங்கடபட்டரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
இவ்வாறு மிகவும் மேதாவியாய்த் திகழ்ந்து வந்த வேங்கடபட்டரை, அவரது தமையனாரான குருராஜர் புவனகிரிக்கு அழைத்து மனைவியுடன்
சுகமான கிருகஸ்த தர்மத்தை அனுஷ்டிக்கும் படி செய்த்தார். சில ஆண்டுகளில்
இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வேங்கடபட்டர் தமது காலமெல்லாம்
மாத்வ சாஸ்திர நூல்களை சீடர்களுக்கு உபதேசிப்பதிலேயே கழித்தமையால் தமது குடும்ப
ஜீவனத்திற்கு யாரையும் அண்டவில்லை. அதனால் வாழ்கை மிகவும் சிரமமாக இருந்தது. எனவே
வேறு வழியின்றி கும்பகோணம் சேர்ந்து தமது குருவான சுதீந்திரரை அண்டினார்.
சுவாமிகளும் அவர்களுக்கு மடத்திலேயே தங்கவும் மற்றும் ஆகார வசதிகளையும் செய்து
கொடுத்தார்.
ஒரு சோதனை : இப்படி காலம் கழித்து வந்த வேங்கடபட்டருக்கு
ஒரு சோதனை வந்தது. இவரது குருவான சுதீந்திர சுவாமிகளுக்கு தேக சௌகரியம்
குறைவானதால் தமக்குப் பின் மடத்தை நிர்வகிக்கக்கூடிய மற்றொருவருக்கு சந்யாஸதீக்ஷை
அளிக்க விரும்பி,
வேங்கடபட்டரை சந்யாஸம் ஏற்கும்படி வற்புறுத்தினார்.
வேங்கடபட்டரோ,
இளம் வயதினராக இருந்ததாலும், மனைவியிடமும், குழந்தையிடமும், கிருக்ஸ்த தர்மத்தில் பற்றுக் குறையாமல் இருந்ததாலும்
சந்யாஸம் மேற்கொள்ளத் தமக்கு இயலாமையைப் பணிவுடன் வெளியிட்டார்.
குருவும் அதையேற்று, வேறொருவருக்கு சந்யாஸதீக்ஷை அளித்து " யாதவேந்த்ரர்
" எனும் தீஷா நாமம் சூட்டினார்.சில நாட்களில் சுதீந்திரரும் தேகசுகமடைந்தார்.
மட நிர்வாகத்தையும் நடத்தி வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் யாதவேந்த்ரர் குருவின்
அனுமதி பெற்று பதரிகாசிரம ( பத்ரிநாத்தில் உள்ள ஒரு ஆசிரமம் ) யாத்திரை சென்றார்.
No comments