குரு ஸ்ரீ ராகவேந்திர் - வெங்கண்ணர் திவானாகியது
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ர நாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்ட சித்திகளைப் பெற வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
வெங்கண்ணர் திவானாகியது : பிறகு ஒரு சமயம் சுவாமிகள்
மறுபடியும் யாத்திரை புறப்பட்டார். அப்போது கர்நூல் ஜில்லாவைச் சேர்ந்த அதோனியில்
சுவாமிகள் சிலகாலம் தங்கினார். அந்தப் பட்டணத்தின் திவானாக இருந்தவர் வெங்கண்ணர்.
அவர் திவானாக ஆன விதம் விசித்திரமானது. முன் அவர் ஒரு ஏழைப்
பிராமணர். இளமையில் தாய் தந்தையர்களை இழந்து மாமனிடம் வசித்து வந்தார். இவர்
படிப்பில்லாமல் மாடுகளை மேய்த்து வந்தார். ஒருநாள் இவர் ஆலமரத்தடியில் தூங்கிக்
கொண்டிருக்கும்போது ஒரு நாகம் இவர் தலைக்கு மேல் படமெடுத்து நிழல் கொடுத்தது.
இதைக் கண்டவர்கள் அந்த நாகத்தை விரட்டி விட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஆனால் இவ்வாறு பாம்பு தலைக்குமேல் படமெடுத்து ஆடினால்
அத்தகையவர் உயர்ந்த பதவி பெறுவார் என்று சொல்வது வழக்கம். இது இப்படி இருக்க ஸ்ரீ
ராகவேந்திர சுவாமிகள் அதோனிக்கு வந்தார். அவரை பயபக்தியுடன் வணங்கி நின்றான்
வெங்கண்ணன். ஆச்சார்ய கடாச்சம் அவன் மீது பரவியது. அழகிய முகப் பொலிவுடன் விளங்கிய
வெங்கண்ணனை சுவாமிகள் அனுக்கிரகித்து, ஏதாவது
ஆபத்து நேர்ந்தால் தம்மை நினைக்கும் படி கூறினார்.
இது இப்படி இருக்க, ஒரு நாள் ஹைதராபாத் நவாபு அகமத் சையத் அதோனியில் யானை மீது
ஊர்வலம் வந்து கொண்டிருந்தான், பாதையின்
இருபுறமும் மக்கள் கூட்டமாகக் குழுமியிருந்தனர். வெங்கண்ணரும் அவர்களிடையே நின்று
ஊர்வலத்தைக் கவனித்து வந்தார். அப்போது டில்லி பாதுஷாவிடம் இருந்து வந்த தூதன்
ஒருவன் இந்தியில் எழுதிய கடிதம் ஒன்றை நவாபிடம் கொடுத்தான். உடனே இந்தி படிக்கத்
தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, வெங்கண்ணாவிடம் அக்கடிதத்தை படிக்கக் கொடுத்தார் நாவாப்.
எழுத்து வாசனையறியாத வெங்கண்ணர் எப்படிப் படிப்பார்? ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை பக்தியுடன் மனதில் நினைத்தார்.
தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று மனமுருக பிரார்த்தித்தார். என்னே ஆச்சரியம் !
அந்தக் கடிதத்தில் இருந்த எழுத்துக்கள் தாமே அவர் காதுகளில் ஒலித்தன, அவரும் அப்படியே உச்சரித்துக் காட்டினார். இன்னும் சில
இராஜ்ஜியங்களை ஹைதராபாத்துடன் இணைத்திருப்பதாக அம்மடலில் இருந்தது. நவாபின்
மகிழ்ச்சிக்கோர் எல்லையே இல்லை, இம்மகிழ்ச்சிச்
செய்தியைப் படித்த வெங்கண்ணரயே அந்த இராஜ்ஜியங்களுக்கு திவானாக்கினார்.
No comments