Header Ads

தீபாவளி

தீபாவளி


மொழி, இனம், மதம் கடந்து அனைத்து மக்களும் உவகையுடன் கொண்டாடும் மகத்தான பண்டிகை தீபாவளி, தெற்கு முதல் வடக்கு வரை இந்திய மக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடும். ஒரே பண்டிகை தீபாவளி எனலாம். இந்தியாவில் மட்டுமின்றி மேலைநாடுகளில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது தீபாவளி.



தீப திருநாள் தீபாவளி

தீபாவளியைக் குறித்து புராணங்கள் பல்வேறு ஆன்மிகக் காரணங்களை கூறுகின்றன. கிருஷ்ணர் நரகாசுரன் எனும் கொடியவனை அழித்து, மக்களை துன்ப இருளிலிருந்து விடுவித்த நாளே தீபாவளி என்றும், ராமாயணத்தில் வனவாசம் சென்ற ராமர், வனவாசம் முடித்து திரும்பியபோது மக்கள் தீபங்களை ஏற்றித் தங்கள் வாழ்வில் ஒளியாக வந்த ராமருக்கு வரவேற்பு தந்த நாள் என்றும், ஆண், பெண் சமத்துவத்தை உணர்த்தும் விதமாக ஈஸ்வரன் சக்திதேவியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த நாள் என்றும் பல விதமான சம்பவங்களைக்  குறிப்பிடுகின்றன தீபாவளி பற்றிய புராணங்களும், வரலாறுகளும்.

மொத்தத்தில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பல சம்பவங்களின் அடிப்படையில், மக்கள் விளக்கேற்றி வைத்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய, மறக்கவியலாத சிறப்புமிக்க தீபத்திருநாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்பதை அறியலாம்.

இந்தத் தீபத்திருநாளின் தாத்பர்யங்களை ஆன்மிகத்துடன் அறிவியல் கலந்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயிலின் தலைமை பட்டாச்சார்யார் திரு.சுதர்சனம்.

"புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒளி தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளே இன்று தீபாவளியாகிவிட்டது. இறைவன் அசுரனை அழித்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தின் பின்னணியில் ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அதாவது நம் உள்ளத்தில் எழும் காம, குரோத, பாப குணங்களான அழுக்குகளை நீக்கி சத்வ குணமான நல்ல மனதைப் பெற வேண்டும் எனும் செய்தியை மக்களுக்கு உணர்த்துவதே அந்தத் தத்துவம். உதாரணமாக ''நரகமே சொர்க்கமாக நாவில் நின்றார்கள் கேட்க" அதாவது பாரத யுத்தம் முடிந்து கிருஷ்ணர் யுதிஷ்டிரனை நரகத்தினுள் அழைத்துச் சென்றபோது, தர்மா பேசிய நல் வார்த்தைகளைக் கேட்ட நரகத்தில் இருந்த பாவிகள், புனிதம் பெற்று நல்லவர்களானார்கள் என்றும் ஒரு செய்தி. 

நல்ல வார்த்தைகளைக் கேட்பதாலேயே புனிதம் பெற்றால், நல்ல மனம் கொண்டு வாழ்பவர்கள் நேரே சொர்க்கத்திற்குதானே செல்வார்கள்?! நல்ல மனதுடன் வாழ்பவர்கள் பூமியில் வாழும் வாழ்க்கையே சொர்க்கத்துக்கு ஒப்பாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். புராணங்களும், இதிகாசங்களும் ஆன்மிகம் வாயிலாக நமக்கு நன்னடத்தைகளையே கற்றுத்தருகிறது'' என்றவர் தொடர்ந்து தீபாவளியன்று எப்போது படுக்கையில் இருந்து எழ வேண்டும் என்பது பற்றியும், எழுந்தவுடன் செய்யவேண்டிய கங்காஸ்நானம் பற்றியும் கூறினார்.

தீபாவளி தரிசனம்

''தீபாவளியன்று அதிகாலை எழுவது நல்லது. அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து காற்றிலுள்ள ஓசோனை சுவாசித்தலின் மூலம் நம் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எதற்கு? கட்டாயம் குளிக்க வேண்டுமா? என்பது இன்றைய இளைஞர்களிடம் எழும் பெருத்த சந்தேகம்.

கணினியை மேய்ந்துவிட்டு, நடு இரவில் படுக்கச் செல்லும் இளைய சமுதாயம், தீபாவளி அன்று மட்டுமாவது அம்மாவின் சொல் கேட்டு அம்மா கையால் நல்ல எண்ணெய் தேய்த்துக்கொண்டு சுடுநீரில் தலைக்கு குளிக்கவேண்டும். இதனால், உடலின் அதிகப்படியான உஷ்ணம் தணிந்து உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அந்தக் காலங்களில் கூட்டுக் குடும்பங்களில் விறகுகளை எரியவைத்து பெரிய மண்பானையில் சந்திரன், சூரியன் போன்ற தேவதைகளை வரைந்து அதில் நீரை ஊற்றிக் காய வைப்பார்கள். அக்னியில் கங்கை தேவதையை ஆவாகனம் செய்து, பல இடங்களில் இருந்து வந்திருக்கும் நீரை தூய்மையான வெந்நீராக்கி அதையே கங்கையாக பாவித்து தலைமுழுக்காடும்போது நாம் செய்த பாவங்கள் அகன்று புது மனிதனாக பிறப்பெடுப்பதாக ஐதீகம்.

இந்த அவசரகாலத்தில் வாரம் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நல்ல பழக்கம் இல்லையெனினும், குறைந்தபட்சம்  தீபாவளி அன்று மட்டுமாவது தலைக்கு எண்ணெய் வைத்து வெந்நீரில் குளித்து ஆரோக்கியம் பெறுங்கள். மேலும் நல்ல(எள்) எண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

அன்னையின் அன்பான எண்ணெய்த் தேய்ப்பு மனதிலுள்ள பாரங்களை நீக்கி மனதை இலகுவாக்கி விடும் அற்புதத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

அதே நேரம் எண்ணெய் தேய்த்துக் குளித்த பின் தூங்காமல் இருக்கவேண்டும். ஏனெனில் தூங்கும் போது உயிர் நாளங்கள் செயலிழந்து கொழுப்புச் சத்து உடலில் தங்கி விடும். வாய்ப்பு உண்டு என்பதாலேயே தூக்கம் தவிர்க்கப்படுகிறது.

தீபாவளி பலகாரம்

இப்போது எண்ணெய்க் குளியலால் உடல் புத்துணர்ச்சி பெற்றுவிட்டது. புத்துணர்ச்சி பெற்ற உடலுக்கு புத்தாடைகள் அணிவிப்பதன் மூலம் ''பழையன கழிந்து புதியன புகுதல்" நடைமுறைபடுத்தப்படுகிறது. இப்போது நவீன ஆடைகள் வந்து நாகரீகம் மாறிவிட்டாலும், தூய்மையான பருத்தித் துணியிலான ஆடைகளை அணிந்து மகிழ்வதே உடலுக்கும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் நல்லது.

எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவன் முன் விழுந்து நமஸ்கரித்து வணங்கியவுடன் அகோரப்பசிக்கு ஆளாவோம், அப்போது  வீட்டில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் செய்த இனிப்பு, கார வகைகளை ஆசைதீர உண்டு களிப்போம்.

அந்தக் காலங்களில் முளைகட்டிய நவ தானியங்களை அரைத்து மாவாக்கி அதை வைத்தே மிக்சர், லட்டு போன்ற பண்டங்கள் தயாராகும். இப்போதோ விதவிதமான கணக்கிலற்ற நாக்குக்கு ருசியாக மட்டும் இனிப்பு மற்றும் கார வகைகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. கடையில் வாங்குவதை விட அன்புடன் வீட்டில் செய்யப்படும் தின்பண்டங்களில் என்றுமே சுவையுடன் சத்தும் சுகாதாரமும் அதிகம். தேன், நெய், கருப்பட்டி போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பில் உள்ள ஆரோக்கியம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சத்தற்ற இனிப்பு வகைகளில் கிடைக்க சாத்தியமில்லை.

அடுத்து பட்டாசுகள், வாணவேடிக்கைகள். பட்டாசுகள் வெடிக்கச் சொல்லி எந்த சாஸ்திரத்திலும் கூறவில்லை. அந்தக் காலங்களில் மின்சாரம் இல்லை என்பதால் எல்லோரும் அகல்விளக்கு ஏற்றி உள்ளத்திலும் ஒளி ஏற்றுவர்கள். இப்போது காலம் மாறிவிட்டதால் பட்டாசு வெடித்துச் சிதறுவது போல துன்பங்களும் சிதறி வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும் என்ற நோக்குடன் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. எப்படியோ தீபாவளியன்று பட்டாசு வெடித்து மகிழ்வது, அந்தத் தொழிலில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக அமைவது  நல்ல விஷயம்தானே!

அக்காலங்களில் சித்திரையில் எளிதாக கிடைக்க கூடிய புளி, பருப்பு போன்றவை வருடம்தோறும் சேகரித்து வைப்பர்கள். அதுபோல ஐப்பசியில் படையலிட்டு அனைத்து வகையான லட்சுமி கடாட்சங்களையும் சேகரித்து வைத்தால் வாழ்வு வளமாகும் என்று நம்பி இதுபோன்ற பண்டிகைகளை நமது முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். இறைவனை வேண்டும்பொழுது தன்னலம் கருதாது பிறர் நலத்தை வேண்ட, வேண்ட தன்னுடைய இல்லம் செழிப்பதை அனுபவப் பூர்வமாக உணரலாம். தன்னலம் கருதாது பிறர் நலம் கருதியே பிரார்த்தனை செய்து வழிபடுவதே இந்து தர்மத்தின் நியதி.

எண்ணெய்க் குளியல்

அதிகாலை எழுந்து, அம்மா கையால் எண்ணெய் தேய்த்து, கங்கையாக பாவிக்கும் வெந்நீரில் நீராடி, கிருமிநாசினியாகிய மஞ்சள் பூசிய புதிய ஆடைகள் அணிந்து, இறைவனுக்கு படையலிட்டு உலக நலம் வேண்டி பிரார்த்தித்து பலகாரங்களை வயிறு நிறைய உண்டு மகிழ்ந்து பின்பு என்ன செய்வது? இந்தக் காலத்தில் தொலைக்காட்சி என்னும் மாய உலகத்தில் மூழ்கிப் போகின்றனர். ஆனால், அன்று உறவில் உள்ள பெரியோர்களையும், நட்பு வட்டங்களையும் நாடிச்சென்று நம் வீட்டில் செய்த பலகாரங்களை பகிர்ந்து அளித்து பின் அவர்களின் காலில் விழுந்து நல் ஆசிகளை பெறுவதே சிறப்பு. இப்பொழுது உள்ள தலைமுறை அடுத்தவர் காலில் விழுவதை கௌரவக் குறைவாக எண்ணுவது மிகவும் தவறு.

பெரியோர் காலில் விழுந்து வணங்கும் போது நமக்குள் எழும் ''நான்'' எனும் அகங்காரம் அழிந்து பணிவு என்னும் பெருங்குணம் வருகிறது. அவர்களின் நல்ல வாழ்த்துக்கள் நேர்மறையான எண்ணங்களைத் தருகிறது. இவற்றினால் வாழ்வு மேன்மையாகிறது. அத்துடன் வயிறு நிரம்ப உண்ட உணவு, கீழே குனிந்து வணங்கும் உடற்பயிற்சியினால் எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் உறவுகளையும் சுமுகமாக வைத்திருக்க உதவுகிறது. இத்தனை நன்மைகள் உள்ள பெரியோர்களை வணங்குவது நன்மைதானே?!

தீபாவளி அன்று உண்ணும் உணவுகள், சில வேளைகளில் எளிதில் ஜீரணிக்காது  எனவே அக்காலங்களில் சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற மருந்துப் பொருட்கள் அடங்கிய தீபாவளி லேகியத்தை செய்து சாப்பிடச் செய்வார்கள். இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணமாகிவிடும். இன்று அந்த வழக்கம் மாறி மாத்திரைகளை நாடுகின்றனர்.

தீபாவளிக் கொண்டாட்டம்

தீபாவளி அன்று காலை வீட்டின் முன் நாதசுரத்துடன் மங்கள வாத்தியம் வாசிப்பது வழக்கம். மங்கள இசை வீட்டில் உள்ள துர்சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் செலுத்துகிறது. பொலிவற்ற வீட்டுக்கு 'சார்ஜ்' ஏற்றுகின்றன மங்கள வாத்தியங்கள்.

வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது மற்றும் வீட்டினுள் கோமியம் தெளிப்பது, வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது. இவை அனைத்துமே கிருமி நாசினிகளாக செயல்பட்டு ஆரோக்கியத்தை தருகிறது. பச்சரிசி மாவினால் கோலம் இடுவதால், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவளித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கிறது.

இதுவே தீபாவளி பண்டிகையின் தாத்பர்யங்கள் இதை புரிந்து, நம் பிள்ளைகளுக்கும் புரியவைத்து மகிழ்வுடன் தீபாவளியை கொண்டாடுவோம்''.



No comments

Powered by Blogger.