மஹாலஷ்மியின் அருள் நிறைந்த மகத்தான பண்டிகை தீபாவளி
மஹாலஷ்மியின் அருள் நிறைந்த மகத்தான பண்டிகை தீபாவளி
நரக சதுர்தசி எனும் தீபாவளி: ஐப்பசி மாதம் தன்னுள்ளே பல
விஷேட தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றுள் பண்டிகையென்ற ரீதியில்
கொண்டாடப்படுவது தீபாவளியாகும். இப்பண்டிகை ஐப்பசித் திங்களில் கிருஷ்ணபட்ச
சதூர்த்தசியன்று கொண்டாடப்படுகிறது. இதை நரக சதுர்த்தசி என்று கூறப்படுகிறது.. நரக
சதுர்த்தசி அன்று,
நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து
விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு
மருந்து,
நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
நரகாசுரனின் என்பவன் யார்?
நரகாசுரனின் உண்மைப் பெயர் பெளமன். திருமால் வராக அவதாரம்
எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர
வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது.
நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நர:+அசுரன்
எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
தீபாவளி கொண்டாட காரணம்: இந்த தீபாவளி
எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன்
இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து
வந்தான். இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு
பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான்.
எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.அவன் மகா விஷ்ணு
மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே
விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.
சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின்
அம்புக்கு பலியாகி விழுந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று
தெரிந்தது. நரகாசுரன் இறக்கும் தருணத்தில் தனது தவறுகளை உணர்ந்தான்
கிருஷ்ணபரமாத்மாவிடம் நான் மரணத்தைத் தழுவும் இந்நாள் ஆண்டு தோறும் மக்களால்
கொண்டாடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவனது வேண்டுகோள் ஏற்கப்பட்டு
ஆண்டு தோறும் ஜப்பசி மாத சதுர்த்தசி தினம் நரக சதுர்த்தசி என்று அழைக்கப்பட்டு
அவன் நினைவில் நிறுத்தப்படுகின்றான்.
வட மாநிலங்களில் தீபாவளி: தீபாவளி ஒவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு
வகையில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் ஐந்து
நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு தீபாவளியின் முதல் நாளை 'தந்தேரஸ்'என்று
அழைக்கிறார்கள். 'தந்தேரஸ்' அன்று நாம்
செய்யப்படும் தானமானது பலமடங்கு பலனளிக்கும் என்பது வட மாநில மக்களின் நம்பிக்கை. 'தந்தேரஸ்' அன்று இரவு
முழுவதும் விளக்கு ஏற்றிவைப்பது, எமபயம்
தீர்ப்பதாக ஐதீகம்.
எனவேஅந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் யமராஜன் தன் சகோதரி
யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள்.
இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள்
சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின்
நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன.
தீபாவளியின் பெருமை:
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று
உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர்
என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே
கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீபாவளி குளியல் என்பது கங்கை நதியில் குளிப்பதற்கு
ஒப்பாக கருதப்படுவதால் இது கங்காஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. தர்மசாஸ்திர
மூலகிரந்தங்களான விஷ்ணுபுராணம், ஸ்ம்ருத்யர்த்தஸாரம், ஸ்ம்ருதிரத்னம், காலாதர்சத்திலும், ஸாரஸங்க்ரஹத்தில் ஆஸ்வீஜ மாதத்தில் சூரியன் சுவாதியில்
நிற்க,
சந்திரன் சுவாதியில் வரும் நாளில் குளித்தல்
லக்ஷ்மீகராமனது.
சில வருடங்களில் மட்டுமே சூரியன் சுவாதியில் நிற்க தீபாவளி
நிகழும்,
ஏனெனில் சூரியன் துலா (ஐப்பசி தமிழ்) மாதத்தில் மட்டுமே சுவாதியில்
இருப்பார்,
ஐப்பசி மாத துவக்கத்தில் அல்லது முடிவில் சாந்திரமான ஆஸ்வீஜ
மாத அமாவாசை ஏற்படின் நட்சத்திர மாறுதல் இருக்கும். ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம்
ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து சிறிது நேரம்
ஊறவைத்து பின் கொதிக்கவைத்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும்.
காய்ச்சிய
நல்லெண்ணையை உச்சந்தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி சற்று ஊறவேண்டும்.
பிரம்மன் காத்தல் நிலையில் (ரக்க்ஷை) "நாயுருவி" செடி வடிவில்
இருக்கிறார். இந்த நாயுருவி செடியால் தலையை மூன்று முறை தடவியநிலையில் வலமாக
சுற்றி கால்படாமல் பெருமரத்தின் அடியில் சேர்த்து பின்னர் கங்கை, லக்ஷ்மியை தியானித்து தலைக்கு குளித்தல் வேண்டும்.
"தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்'
கங்காஸ்நானத்திற்கு பின்னர் தீபம் ஏற்றி புத்தாடைகள்
உடுத்தி சம்பிரதாயப்படி விபூதி, நாமம் இட்டு
தங்க நகைகள் பூண்டு லக்ஷ்மி நாராயனனை வணங்கி செல்வ செழிப்புடன் ஆரோக்கியத்துடன்
விளங்க பிராத்தித்து லக்ஷ்மி, விஷ்ணு
அஷ்டோத்திரம் வாசித்து தீபாவளி லேக்கியம், இனிப்பு பலகாரவகைகள், பழங்களை படைத்து கற்பூர தீபம் காண்பித்து அங்கம் புழுதிபட
சேவித்து பின்னர் லேக்கியத்தையும் இனிப்புகளையும் உண்டு வானவேடிக்கையில்
ஈடுபடவேண்டும்.
பெரியவர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்தி அவர்களின் ஆசியை
பெறுதல் மிகவும் முக்கியமானதாகும். அவலக்ஷ்மி நீங்கி லக்ஷ்மி கடாக்ஷம் பெருக
பிராத்தனை செய்தல் வேண்டும் கீழ் கண்ட சுலோகத்தைக் இறைவன் முன்நின்று கூறவேண்டும்.
"விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா
தாய் போன்ற கங்கா தேவி நீ
மகாவிஷ்ணுவின் பாதத்தில் தோன்றி வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதையாக உடையவளாகவும் விளங்குகிறாய். ஜனன -
மரண இடைப்பட்ட காலங்களில் பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம், மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக வாயு பகவான்
கூறியுள்ளார். தங்கள் கருணையால் அவைகள் என்பொருட்டு இங்கு வந்து அருள வேண்டும்.
நீரின்றி அமையாது உலகம் எனும் வள்ளுவன் வாக்குப்படி நீர் மிக முக்கியமானதும்
தாயார் போன்றதாகும். அந்த நீரை கங்கஸ்நானம் என செய்வதால் நல்லவை நடக்கும்.
கேதார கெளரி விரதமும் தீபாவளியும்: கேதாரம் என்ற சொல்லுக்கு
இமயமலைப் பகுதியைச் சார்ந்த வயல் பகுதி என்பது பொருளாகும். கௌரி எனப் போற்றப்படும்
பார்வதி அம்மை கேதாரப் பகுதியில் எழுந்தருளிழுள்ள சிவபெருமானை நினைத்து மேற்கொண்ட
விரதமாயின் இது கேதார கௌரி விரதம் என அழைக்கப்படுகிறது.
இவ்விரத முறையினைப்
பின்பற்றி உமாதேவியார் சிவனுடன் ஐக்கியமானார் என்பதே இதன் சிறப்பாகும். இவ்விரதம்
கௌரி நோன்பு,
அம்மன் விரதம், கௌரி காப்பு
நோன்பு,
நோன்பு என பல பெயர்களில் வழங்கப்படுகிறது. ஸ்கந்தபுராணத்தின்
படி,
சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார்.
இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை
ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக
இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.
இவ்விரதத்தின் போது இறைவனுக்கு பிரசாதமாக அதிரசம் எனப்படும் பச்சரிசி மாவு, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் பதார்த்தம் பிரதானமாகப்
படைக்கப்படுகிறது. தற்காலத்தில் கணவனும் மனைவியும் இணைந்து அதிரசம் தயாரிக்கும்
காட்சி சிவ சக்தி ஐக்கியத்தை பறைச்சாற்றும் வண்ணம் அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டின்போது நோன்புக் கயிறு வைத்து வழிபட்டு இறுதியில்
நோன்பிருக்கும் எல்லோருடைய கைகளிலும் அணியப்படுகிறது. இவ்வழிபாடு வீடுகளிலும், கோவில்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
கோ பூஜை (லக்ஷ்மிபூஜை):
ஸாயங்காலத்தில் கோமாதா எனும் பசுக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத்
திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப்
படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய
தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது முகூர்த்த சாஸ்திரம். பசுவின்
கழுத்தில் மணி கட்டி இருக்கும். அந்த மணி சத்தத்துடன் வயிறார உண்ட மகிழ்ச்சியுடன்
மண் "தூசி" பறக்க தன் இருப்பிடம் வந்து சேரும் நேரம் அஸ்தமன கால கோதூளி
லக்னம் எனப்படும்.
இந்த நேரம் மகாலெட்சுமி வரும் நேரம் என்பார். பசுவை லக்ஷ்மி
ஸ்வரூபமாக நினைத்து திலகம் இட்டு வணங்கி, கோதுமை தவிடு, வெல்லம்
சிறிது கலந்து உணவாக தந்து வாலை தொட்டு வணங்கவும். மாலையில் லக்ஷ்மி கடாக்ஷ்ம்
வேண்டும் என பிராத்தித்து சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் பூஜை அறையில் மற்றும்
வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றி வழிபடவும். அஸ்தமன கால கோதூளி லக்னம் சுக்கிரனின்
ஆதிக்கம் நிறைந்ததாகும்.
இந்த மஹாலட்சுமி நேரம் கோதூளி லக்னம் எனும் கோதூளி
முஹூர்த்தத்தில் வீட்டை சுத்தம் செய்து நாமும் சுத்தமாக முகம் கைகால் அலம்பி
விளக்கேற்றிவைத்து ஊதுபத்தி மணம் பரப்பி மகாலக்ஷமியின் ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ அன்னபூர்னாஷ்டகம், சப்த கன்னி தேவியர் ஸ்தோத்திரங்கள் ஆகியவை படித்து
ஸ்ரீமகாலக்ஷமியை வரவேற்பது தாரித்ரியத்தை போக்கி சகல சௌபாக்கியங்கலும் கிட்டும்.
மாலையில் தீபம்: 'தீபம்' என்றால்
ஒளியை தரும் விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும்
பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய்
ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம்
போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும் . ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.
ஜோதிடத்தில் தீபாவளி: தீபாவளியை சுக்கிர பகவானின் அதிகபட்ச ஆதிக்கம் நிறைந்த நாளாக
இருந்தாலும் அனைத்து கிரக்களின் பங்களிப்பு நிறைந்து நிற்கிறது. மரபை போற்றுதல், பித்ருகடன் போன்றவை சூரியனின் காரகங்களாகும். ஐப்பசி மாதம்
எனும் துலா மாததில் சூரியன் சுக்கிரனின் வீட்டில் சென்றடையும்போது தீபாவளி பண்டிகை
கொண்டாடப்படுகிறது. மேலும் சூரியனை பகல் நேர தந்தையாகவும் சுக்கிரனை பகல் நேர
அன்னையாகவும் ஜோதிடம் கூறுகிறது. பகல் முழுவதும் சுக்கிரனின் பிடியில் நின்று இரவு
வந்ததும் இரவு நேர அன்னையை குறிக்கும் சந்திரனிடம் சென்று தஞ்சம் அடைவதை
குறிக்கும் வண்ணமாகவும் அமைந்துள்ளது.
தீபாவளியன்று கங்கை நீரில்
வியாபித்திருப்பது சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கையாகும்.
கங்கா ஸ்நானம்
செய்வதில் நல்லெண்ணை சனைஸ்வர பகவானின் காரகம் பெற்றதாகும்.
வெண்ணீர் செவ்வாய்
சந்திரன் காரகமாகும். எனவே தீபாவளியன்று எண்ணை தேய்த்து குளிப்பதாள் சனி தோஷங்கள்
விலகுவதோடு மஹாலக்ஷ்மியின் அருளும் சேரும்.
கார பட்சனங்கள், வெண்ணீர் குளியல், பட்டாசு ஒலி, அதிர்வேட்டு
போன்றவை செவ்வாயின் காரகங்களாகும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக
இருப்பது புதனின் காரகத்துவங்களாம்.
பெரியோரை வணங்கி ஆசி பெறுவது, கோயில்களுக்கு செல்வது இறைவழிபாடு குருவின் காரகத்நுவங்கள்
ஆகும்.
தீப ஒளி,
புத்தாடை, இனிப்புகள், நெய்யில் செய்த இனிப்புகள், மந்தாப்புகளின் வெளிச்சம், பலவித ஒளி, மகிழ்ச்சி, போன்றவை சுக்கிரனின் காரகத்துவங்களாகும்.
மேலும் புதுப்படம்
வெளியிட்டவுடன் தியேடருக்கு சென்று பார்த்து மகிழ்வது போன்ற பொழுது போக்கு
அம்சங்களும் சுக்கிரனின் காரகம் நிறைந்ததாகும்.
யம தீபம் ஏற்றுவது, எண்ணை குளியல், பலகாரங்கள்
தின்று மந்தமாக இருப்பது போன்றவை சனியின் காரகங்களாகும்.
காதை பிளக்கும் ஒலியுடன்
வெடிக்கும் வெடிகள், இரசாயனங்கள், ராக்கெட்டுகள் போன்றவை ராகுவின் காரகங்களாம்.
தான தருமங்கள்
செய்வது,
தீபாவளி மருந்து, இறைவழிபாடுகள் போன்றவை கேதுவின் காரகங்களாகும்.
மேலும்
பட்டாசு வெடிக்கும்போது சிறிய தீ விபத்துக்கள் நேர்வது கேதுவின் காரகமாகும். எனவே
தீபாவளியை கொண்டாடுபவர்கள் அனைவரும் நவக்ரகங்களின் அருளை ஒரு சேர பெறுகிறார்கள்
என்றால் மிகையாகாது.
நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால்
அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ முயற்சி செய்து இந்த தீபாவளி திருநாளில்
இறைவனுடைய அருளைப் பெறுவோமாக.
No comments